Header Ads

test

காவிரி நீர் மேலாண்மை: கர்நாடக அரசிற்கு எதிராக தமிழக அரசு முறைப்பாடு

தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காமை குறித்து தமிழக அரசு முறைப்பாடு ஒன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4 ஆவது கூட்டத்திலேயே தமிழக அரசு முறையிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

அதனைத் தொடர்ந்து மேலாண்மை ஆணையகம் மூன்று முறை டெல்லியில் கூடி, தமிழகம்- கர்நாடகா இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு குறித்து விவாதித்துள்ளது.

இதில் மூன்றாவது கூட்டத்தில், கடந்த ஜூன் மாதத்திற்கான பங்கீடாக தமிழகத்திற்கு 9 புள்ளி 19 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டுமென கர்நாடக அரசுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையகம் உத்தரவிட்டது.

ஆனால், கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை 1.71 டி.எம்.சி காவிரி நீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

இதனால் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழக அரசு முறையிட்டபோது, தங்களது மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாதமையினால் தண்ணீர் திறக்க இயலவில்லையென கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையிலேயே இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காமை, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் விவகாரம் ஆகியவை குறித்தே விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments