Header Ads

test

நீராவியடிப் பிள்ளையார் கோயில் விவகாரம் – நீதிமன்ற தீர்ப்பை மதிக்குமாறு வலியுறுத்து

நீராவியடிப் பிள்ளையார் கோயில் விவகாரம் குறித்து நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலு குமார், எஸ்.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர், ரஜமகா விகாரை ஆலய விகாராதிபதி, விகாரை சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் சட்டத்தரணி ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது இந்த ஆலயத்தின் தொன்மை பற்றி விளக்கமளித்த பிள்ளையார் ஆலய நிர்வாகம் ஆலயம் தமக்கே உரியதென்று ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
புத்தசாசன அமைச்சு, அந்த இடம் குறித்து விளக்கம் கோரியதையும் பிரதேசசபை அங்கு விகாரை இருக்கவில்லையென்று குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டினர்.
எனினும் பிக்குகள் சார்பு சட்டத்தரணி இதை கடுமையாக மறுத்தார். 2013ம் ஆண்டு, 80 – 166 இலக்க வர்த்தமானியின் மூலம், அதை தொல்பொருள் திணைக்களம் பொறுப்பேற்றதாகவும் அது தொல்பொருள் திணைக்களத்திற்குரிய நிலம் எனவும் எடுத்துரைத்தார்.
அங்கு பிள்ளையார் ஆலய கட்டுமானத்திற்கு பொலிஸார் தடை விதிப்பதை ஆலய நிர்வாகம் சுட்டிக்காட்டியதுடன், நீதிமன்ற தடையிருக்கும்போதே விகாரை கட்டுமானம் நடந்ததை சுட்டிக்காட்டினர். எனினும், ஆலய நிர்வாகம் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய திணைக்கள அனுமதிகளைப் பெற்று வந்தால் அனுமதியளிக்க தயாராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட அமைச்சர் மனோ கணேசன், ஆலயத்தின் தற்போதைய நிலைமையை ஒளிப்படம், காணொளியாக எடுத்து ஆதாரமாக வைத்துக்கொள்ளும்படியும் அதன்மூலம் புதிய கட்டுமானங்களை அடையாளம் காணலாமென்றும் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், கோவில் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பை மதித்து இரு தரப்பும் நடக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

No comments