Header Ads

test

சர்ச்சைக்குரிய ‘சோபா’ உடன்பாடு குறித்து மைக் பொம்பியோவுடன் பேச்சு?

அமெரிக்கா முன்மொழிந்துள்ள ‘சோபா’ உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய பிரிவுகள் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன் பேச்சு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போதே, ‘சோபா’ உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய உட்பிரிவுகள் குறித்து அவருடன் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவுடன் ‘சோபா’ உடன்பாட்டைச் செய்துகொள்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
எனினும், ‘சோபா’ உடன்பாடு குறித்து முதன் முதலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடனேயே அமெரிக்கா பேச்சு நடத்தியதென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அப்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது முரணானது என்றும் அவர் கூறினார்.
அவரது ஆட்சிக்காலத்தில் முன்மொழிந்த அல்லது கையெழுத்திடப்பட்ட திட்டங்கள், உடன்பாடுகளுக்கு பின்னர் அவர் எதிர்ப்புத் தெரிவிப்பது இது முதன்முறையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடக்கூடாது என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
2018 ஓகஸ்ட் 28ஆம் திகதி சோபா உடன்பாடு தொடர்பான வரைவு ஒன்றை இலங்கைக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, அமெரிக்க இராணுவத்தினர் கடவுச்சீட்டு இல்லாமல், அமெரிக்க அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்துடன் இலங்கைக்குள் நுழைய முடியும்.
இந்த உடன்பாட்டுக்கு அமைய இலங்கைக்குள் நுழையும் அமெரிக்க படையினரை இலங்கை அதிகாரிகள் சோதனையிட முடியாது.
இலங்கைக்குள் நுழையும் அமெரிக்க கப்பல்களை சோதனையிடும் உரிமையும் இலங்கை அதிகாரிகளுக்கு இருக்காது என்றும் அந்த வரைவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாடு, ஒருதலைப்பட்சமானது என்றும் அதிலுள்ள சில பிரிவுகள் உள்நாட்டுச் சட்டங்களுக்கு எதிரானதென்பதோடு, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உடன்பாட்டில் கையெழுத்திடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments