சூடானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – உயிரிழப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வு
சூடானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
சூடான் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ராணுவ தளபதியும், பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவி விலகினார். அதன்பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தலைநகர் கார்த்தோமில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த மறியல் போராட்டம் சுமார் ஒரு வார காலமாக நீடித்த நிலையில் நேற்று ராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில், குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்தநிலையில், போராட்டக்காரர்களை அடக்க ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது என எதிர்கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சூடான் இடைக்கால ராணுவ நிர்வாகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அதேபோன்று, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment