Header Ads

test

தமிழீழத்துக்கு எதிராக சிங்களத்துடன் கைகோர்த்த சிபிஎம் ; தோழர் தியாகு

தமிழீழத்துக்கு எதிராக இந்தியா மற்றும் சிங்களத்தோடு சேர்ந்து இந்தியாவில் இயங்கும் சிபிஎம் கட்சி பித்தலாட்டம் செய்வதாக தோழர் தியாகு அம்பலப்படுத்தியுள்ளார்.

சிபிஎம் தலமையில் சிங்களக்குரல் எனும்  பதிவில் வெளிப்படுத்தியுள்ள ஆதாரங்கள்..
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு) [சிபிஎம்] 2019 பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அளவில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ’இலங்கைத் தமிழர் பிரச்சனை’ தொடர்பாக இந்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கை பின்வருமாறு:ஏ

”Engage with the Sri Lankan government to devolve powers to the Northern and Eastern region, so that the Tamil-speaking people can have autonomy within a united Sri Lanka. Pursue the efforts for an independent credible inquiry into the atrocities committed in the last phase of the war.”

அதே ’இலங்கைத் தமிழர் பிரச்சனை’ தொடர்பாக சிபிஎம் தமிழ் மாநிலக்குழு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை சொல்கிறது:

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை

• இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து இலங்கைத் தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட மத்திய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது

• இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான நம்பகத்தன்மையுடனான உயர்மட்ட விசாரனை நடத்த வலியுறுத்துவது.

• தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது..
இப்போது சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை சொல்வதைத் தமிழாக்கம் செய்து வைத்துக் கொள்வோம்:

”வடக்கு, கிழக்கு வட்டாரத்துக்கு (பிராந்தியத்துக்கு) அதிகாரங்கள் பகிர்ந்தளித்து ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ் பேசும் மக்களுக்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்யும் படி சிறிலங்கா அரசிடம் வலியுறுத்துக. போரின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி தற்சார்பான (சுயேச்சையான) நம்பகமான விசாரணைக்கான முயற்சிகளைத் தொடர்க,”

சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கைக்கும் தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கைக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருப்பதை உடனே கண்டு கொள்ள முடியும்.

தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை “இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள்” பற்றிப் பேசுகிறது, சமம் என்றால் யாருடன் சமம்? சிங்களர்களுடன் தானே? அப்படியானால் இப்போது தமிழர்களுக்கு சிங்களர்களுடன் சம உரிமைகள் இல்லை என்று பொருள். இப்போது சமமாய் இல்லாத, இனி சமமாக வேண்டிய அந்த உரிமைகள் என்ன? தமிழர்கள் யார்? சிங்களர்கள் யார்? இரு தேசிய இனங்கள் அல்லவா? அல்லது சிபிஎம் வேறு ஏதாவது பெயர் வைத்துள்ளதா?

இரு தேசிய இனங்களிடையே சமத்துவம் இல்லை என்றால் ’இலங்கைத் தமிழர் பிரச்சனை’ என்பது தேசிய இனச் சிக்கல் அல்லவா? மார்க்சிய-லெனினியத்தை வழிகாட்டும் கருத்தியலாக அறிவித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும் முறை இதுதானா? இது தேசிய இனச் சிக்கல் அல்ல என்றால் வேறு என்ன வகையான சிக்கல்?

தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வேண்டுமாம்! எந்த மொழியோடு சம அந்தஸ்து? சிங்கள மொழியோடுதானே? அப்படியானால் தமிழர்கள் மொழி வகையில் ஒடுக்கப்படுகின்றார்கள் அல்லது பாகுபாடாக நடத்தப்படுகின்றார்கள் என்று பொருள். மொழி ஒடுக்குமுறை தேசிய இன ஒடுக்குமுறையின் ஒரு கூறே அல்லவா?

இலங்கைத் தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துகளையும் நிலத்தையும் மீள் ஒப்படைப்பு செய்ய வேண்டுமாம்! அப்படியானால் முதலில் இப்படி நிலத்தையும் சொத்துக்களையும் பறித்த அரசு எது? சிங்கள அரசு என்று சொல்லத் தயக்கம் ஏன்? சிறிலங்கா அரசு என்பது சாறத்தில் சிங்களப் பேரினவாத அரசுதான் என்பதை இத்தனைக்குப் பிறகும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? இனச் சிக்கலை இனச் சிக்கல் என்று இனங்காண விடாமல் தடுக்கும் மனச் சிக்கல்தான் என்ன?

அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்குமாறு கேட்கிறது. ஏன் வடக்கு கிழக்கு? அது தமிழர் தாயகம் என்பதால்தானே? வேறு காரணம் உண்டா? வடக்கு கிழக்கு வழிவழி வந்த தமிழர் தாயகம் என்பதை சிபிஎம் ஏற்றுக் கொள்கிறதா? தமிழர் தாயகத்துக்குத் தன்னாட்சி வேண்டும் என்பதுதான் உங்கள் கோரிக்கையா?

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் வடக்கு கிழக்கை இணைப்பதாகச் சொல்லி அந்த  ஒப்பந்தத்துக்கு ஆதரவளித்தத்தோடு, அமைதிப் படைக் கொடுமைகளையும் ஞாயப்படுத்திய சிபிஎம் இப்போது வடக்கு-கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேச மறுப்பது ஏன்? இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்னாயிற்று?

இந்தக் கேள்விகளுக்கு அஞ்சித்தான் தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை வடக்கு-கிழக்கைப் பற்றியோ அதிகாரப் பகிர்வு பற்றியோ தன்னாட்சி பற்றியோ பேசவே இல்லையோ?

அதிகாரப் பகிர்வு, தன்னாட்சி என்ற தீர்வுகளை முன்வைக்கும் சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை ஒரு நிபந்தனை விதிக்கிறது. “ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள்” என்பதுதான் அந்த நிபந்தனை. இப்போதுள்ள சிறிலங்கா அரசமைப்பின் படி ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் என்பதன் பொருள் ஒற்றையாட்சி சிறிலங்காவுக்குள் என்பதுதான்.

United Sri Lanka means nothing but Unitary Sri Lanka.

இந்த அரசமைப்பை மாற்ற சிபிஎம் ஆல் வழி சொல்ல முடியுமா? இந்திய அரசமைப்பை மாற்றவே வழிசொல்ல முடியாதவர்கள் இலங்கை அரசமைப்பை மாற்றவா வழி சொல்லி விடப் போகிறார்கள்?

சிபிஎம் இலங்கை ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று விரும்பினால் ஒற்றையாட்சி அரசமைப்பைக் கைவிடும்படி சிங்கள அரசுக்கு அல்லவா வேண்டுகோள் விட வேண்டும்? தன்னாட்சி கேளுங்கள், கிடைக்கா விட்டால் விடுதலைக்காகப் போராடுங்கள் என்றல்லவா தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்? .

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறு சிபிஎம் தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை கோருகிறது. ஏதிலியர் உரிமை என்ற சிந்தனையே சிபிஎம்முக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. சிறைக் கைதிகளுக்காகக் கூட இப்படிக் கோரிக்கை வைத்தால் ஏற்க முடியாது. மாந்த உரிமை நோக்கில் சிறைப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்த வேண்டும்.

ஏதிலியர் (அகதிகள்) தகுநிலை பற்றிய 1951 ஜெனிவா ஒப்பந்தத்திலும் 1967 வகைமுறை உடன்படிக்கையிலும் இந்திய அரசு கையெழுத்திட மறுத்து வருவது சிபிஎம் தமிழ் மாநிலக் குழுக்குத் தெரியுமா தெரியாதா? ஏதிலியர்களுக்கு அரசியல், பொருளியல், பண்பாட்டு உரிமைகள் வேண்டும் என்று கேட்க என்ன தயக்கம்?

1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் ஒப்பமிட்டுள்ள இந்தியா அதில் கண்டுள்ள ஏதிலியர் உரிமைகளையாவது மதிக்க வேண்டும் என்று சிபிஎம் கேட்கலாம் அல்லவா? ஏதிலியரை உரிமைகள் கொண்ட மாந்தர்களாக ஆட்சியாளர்களும் மதிக்கவில்லை. சிபிம் தலைவர்களும் மதிக்கவில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது.

”இலங்கைத் தமிழர் பிரச்சனை” என்ற சிக்கலுக்குத் தீர்வு காண்பது ஒருபுறமிருக்க, இனவழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தில் சிபிஎம் எடுக்கும் நிலைப்பாடுதான் நம் உடனடிக் கவனத்துக்குரியது.

”இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில்
நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான நம்பகத்தன்மையுடனான உயர்மட்ட விசாரனை நடத்த வலியுறுத்துவது” என்று தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை .சொல்கிறது.

விசாரணை நடத்த வேண்டியது யார்? இலங்கை அரசு! இலங்கை அரசு நடத்தும் உயர்மட்ட விசாரணை எப்படி சுயேச்சையான விசாரணையாக இருக்கும்? எப்படி நம்பகத்தன்மையுள்ள விசாரணையாக இருக்கும்?

இலங்கை அரசு செய்த குற்றங்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்று ஐநா மூவல்லுநர் குழு சொல்லவில்லை. ஐநா உள்ளக மீளாய்வு அறிக்கை சொல்லவில்லை. ஐநா மாந்தவுரிமை ஆணையர் அலுவலகப் புலனாய்வு அறிக்கை சொல்லவில்லை. எந்த ஐநா மாந்தவுரிமை உயராணையர் அறிக்கையும் சொல்லவில்லை. பன்னாட்டுப் பொறிமுறை அல்லது குறைந்தது கலப்புப் பொறிமுறையாவது வேண்டும் என்பதுதான் இந்த அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள கருத்து.

2015 அக்டோபரில் ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் இலங்கை பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக இயற்றிய தீர்மானத்தில் காமன்வெல்த் உள்ளிட்ட பன்னாட்டுப் பங்கேற்புடன் சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்க சிறிலங்காவே உறுதியளித்தது. இந்த உறுதியைச் செயலாக்காமல் அது இழுத்தடித்துக் கொண்டிருப்பது வேறு செய்தி. ஆனால் இந்த உலக நடப்பு எதுவுமே சிபிம்முக்குத் தெரியாதா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறதா?

சிறிலங்கா என்ன வேண்டுமானலும் செய்யும், அது குறித்து வேறு யாரும் விசாரிக்க முடியாது என்பதுதான் இராசபட்சனின் நிலைப்பாடு. இப்போது தமிழ் மாநில சிபிஎம்மின் நிலைப்பாடும் இதுவேதான். தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கையின் இந்தப் பகுதியை எழுதிக் கொடுத்தது யார்? இந்து ராமா அல்லது டக்ளஸ் தேவானந்தாவா? ஆனால் சீதாரம் எச்சூரியோ பிரகாஷ் காரத்தோ அல்ல என்பது மட்டும் உறுதி.

ஏனென்றால் சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை ”போரின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி தற்சார்பான (சுயேச்சையான) நம்பகமான விசாரணைக்கான முயற்சிகளைத் தொடர்க” (Pursue the efforts for an independent credible inquiry into the atrocities committed in the last phase of the war) என்று இந்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கிறது. இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லை. தற்சார்பான, நம்பகமான விசாரணை என்றால் என்ன? பன்னாட்டு விசாரணைதானா? என்று தெளிவாக்கப்படவில்லை. இப்படிப்பட்ட விசாரணைக்கு சிறிலங்கா உடன்படா விட்டால் என்ன செய்வது? என்ற வினாவிற்கும் விடை இல்லை. ஆனால் தமிழ் மாநில அறிக்கை போல் இலங்கையே விசாரணை நடத்துவது என்ற அபத்தமான கோரிக்கையை அனைத்திந்திய அறிக்கை முன்வைக்கவில்லை என்பது உறுதி.

அனைத்திந்திய அறிக்கைக்குப் பிறகுதான் தமிழ் மாநில அறிக்கை எழுதப்பட்டதென்றால், ஏதோ மொழிபெயர்ப்புக் குளறுபடி என்று ஒதுக்கித்தள்ள முடியாது. அனைத்திந்திய அறிக்கையில் சொல்லப்படும் கொடுமைகள் (atrocities) என்ற சொல் தமிழ் மாநில அறிக்கையில் காணாமற்போனது வெறும் தற்செயலாக இருக்க முடியாது எனத் தோன்றுகிறது.

அனைத்திந்திய அறிக்கையின் ஆங்கில வாசகத்தில் விசாரணை நடத்த வேண்டியது யார் என்று தெளிவாகச் சொல்லா விட்டாலும் இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பொருள் கொள்ள வழியில்லை. ஈழத் தமிழ் மக்கள்பால் சிபிஎம் அனைத்திந்தியத் தலைமையைக் காட்டிலும் தமிழ் மாநிலத் தலைமை கூடுதலாகக் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதா?

தமிழ் மாநில அறிக்கைக்குப் பிறகுதான் அனைத்திந்திய அறிக்கை எழுதப்பட்டதென்றால், ”இலங்கைத் தமிழர் பிரச்சனை”யில் இந்தியத் தலைமைக்கும் மாநிலத் தலைமைக்கும் கருத்து  வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகக் கருதலாமா?

இறுதியாக ஒன்று: தமிழீழத்துக்கு எதிராக, சிங்களப் பேரினவாதத்துக்கும் இந்தியப் பேரரசியத்துக்கும் ஆதரவாக சிபிஎம் பித்தலாட்டம் செய்வது இது முதல் முறையன்று என்பது என் பட்டறிவு!

No comments