மாற்று ஒன்றிற்கான பிரதான தடை…?
விக்கி தலைமையிலான மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக பேசப்பட்டுவருகிறது. ஆனாலும் பேச்சுக்களுக்கு அப்பால் எந்தவொரு முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. விக்கி தலைமையிலான மாற்றுத் தலைமை ஒன்றை கட்டியெழுப்புவதற்கான சகல வாய்ப்புக்களும் இருக்கின்றன. அதற்கான அரசியல் சூழலும் மிகவும் சாதகமாகவே இருக்கிறது. இருந்த போதிலும் அவ்வாறானதொரு மாற்றுத் தலைமை இன்றுவரை சாத்தியப்படவில்லை. ஏன்?
சில தினங்களுக்கு முன்னர் விக்கினேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற இருந்ததாகவும், பின்னர் இறுதி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் விக்கினேஸ்வரன் ஒரு ஊடக அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இதில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விக்கினேஸ்வரன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
தான் இந்தியாவின் சொற்படி செயற்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர், பிரச்சாரம் செய்வதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் குறித்த அறிக்கையில் விக்கி தெரிவித்திருக்கின்றார். இந்தப் பத்திரிக்கையாளர் முன்னர் ஒரு முறை விக்கினேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் இதனை ஒரு வகை இந்தியா போபியா என்று குறிப்பிட்டிருந்தார். சிலர் இவ்வாறான போபியாவுடன் இருப்பதன் வெளிப்பாடே இப்படியான பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். இதில் ஒளித்து மறைப்பதற்கு எதுவும் இல்லை.
வடக்கை பொறுத்தவரையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்தவர்களே இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்வருகின்றனர். சுரேஷ் பிரேமச்சந்திரனை இணைத்துக் கொண்டு பயணிப்பதில் விக்கினேஸ்வரன் மிகவும் உறுதியாக இருக்கின்றார். சுரேஷ மட்டுமல்ல, தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில், ஒத்த கருத்துடைய அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதிலும் விக்கி உறுதியாக இருக்கின்றார்.
ஆனால் கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரையில் விக்கினேஸ்வரன் தங்களுடன் மட்டுமே கூட்டு வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றார். அதனை விக்கினேஸ்வரன் மறுக்கின்ற போதுஇ விக்கினேஸ்வரனை தவறான ஒருவராக காண்பிப்பதற்கான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். இதனை மிகவும் இலகுவாக ஒருவர் புரிந்துகொள்ள முடியும். அதாவது, விக்கினேஸ்வரன் சைக்கிள் சின்னத்தில் தனியாக இணைந்துகொள்வதற்கு சம்மதித்தால் அவர் அரசியலில் புனிதர் அவ்வாறு இணையாவிட்டால்,அவர் தவறானவர். ஒரு வாதத்திற்கா எடுத்துக் கொள்வோம் ஒருவேளை விக்கியை இந்தியா வழிடத்துவது உண்மையானால், அவர் சைக்கிள் சின்னத்தில் இருந்தாலும் அவரை இந்தியா வழிநடத்தலாம்தானே! இங்கு விடயம் வேறு அதாவது கஜனின் நிபந்தனையை ஏற்று, அவர் சைக்கிள் கூடாரத்திற்குள் இணையாவிட்டால் மட்டும்தான் அவர் ஒரு இந்திய முகவர். இணைவதற்கு சம்மதித்தால் அவர் ஒரு முகவர் அல்ல. இது எந்தளவிற்கு ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதம்?
உண்மையில் கஜேந்திரகுமாரின் விருப்பம் தேவை ஒரு மாற்றுத் தலைமை அல்ல. மாறாக, தனது பாட்டன் வழியான குடும்ப கட்சியை பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே! விக்கினேஸ்வரன் தனித்து சைக்கிள் சின்னத்தில் போட்டியிட சம்மதித்தால், அந்த வாய்ப்பை மிகவும் இலகுவாக பற்றிக்கொள்ள முடியுமென்று கஜன் எண்ணுகின்றார். இந்த பின்னணியில் நோக்கினால், கஜன் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் ஒரு போதுமே சிந்திக்கவில்லை. அவர் எப்போதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை மீளவும் கட்டியெழுப்புவது தொடர்பில் மட்டுமே சிந்தித்து வருகின்றார். ஒரு காலத்துடன் வீழ்சியடைந்துவிட்ட பொன்னம்பலம் வழி கட்சியை பேரன் காலத்திலாவது தூக்கி நிறுத்த முடியுமா என்று முயற்சித்து பார்க்கிறார். இதனை இல்லையென்று அவரது ஆதரவாளர்கள் வாதிடலாம். அவருக்கு நெருக்கமான அரசியல் செயற்பாட்டாளர்கள் எவரேனும் வாதிடலாம். அவ்வாறானவர்களிடம் இதுபற்றி ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறது.
கஜேந்திரகுமார் கொள்கைவழியில் மட்டும் சிந்திப்பது உண்மையாயின் ஏன் இன்றுவரை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை அதன் முன்னைய வடிவத்திலேயே பேணிப்பாதுகாத்து வருகின்றார். தேர்தல்களின்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் பெயரை பயன்படுத்திவரும் அவர், ஏன் இன்றுவரை அதனை ஒரு தேர்தல் கட்சியாக மாற்றவில்லை. ஏன் இப்போதும் தனது பாட்டன் வழிவந்த சைக்கிள் சின்னத்தை கைவிடத் தயராக இல்லை? இத்தனைக்கும் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அரசியல் எப்போதோ காலாவதியாகிவிட்டது.
கஜனும் சரி,அவரது அணியினரும் சரி, கிடைக்கும் இடங்களில் எல்லாம், பிரபாகரன்தான் தங்களது தேசியத் தலைவர் என்று கூறிவருகின்றனர். அதற்கு அப்பால் தனது கட்சி கூட்டத்தின் போது அவரது கட்சியின் மூத்த ஊறுப்பினர் அடுத்த தேசிய தலைவர் கஜேந்திரகுமார் என்றும் கூறியிருந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபாகரனை தேசியத் தலைவர் என்று கூறும் தகுதிநிலை இப்போது வடக்கு கிழக்கில் எந்தவொரு தமிழ் தேசிய அரசியல்வாதிகள் என்போருக்கும் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் பிரபாகரனை ஒருவர் அல்லது ஒரு அணியினர் தேசியத் தலைவர் என்று கூறுவார்களானால், அவர்கள் பிரபாகரனின் வழியில் பயணிக்கும் வல்லமையுள்ளவராக இருக்க வேண்டும். பிரபாகரன் தனது இறுதி மூச்சுவரையில் தனது கொள்கைக்காக போராடிய ஒருவர்.
அதற்காக தனது குடும்பத்தையே தியாகம் செய்த ஒருவர். தனது கொள்கையை ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலமாக மட்டுமே, அடைய முடியும் என்பதில் இறுதிவுரை உறுதியாக இருந்த ஒருவர். அவ்வாறான ஒருவரை கஜனும் அவரது அணியினரும் தேசியத் தலைவர் என்று கூற விரும்பினால், கஜன் ஆயுதப் போராட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்கத் தயராக இருக்க வேண்டும். கஜனின் அணியினர் தங்களது சுகபோக வாழ்வன துறந்து தேசியத் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கு அவர்கள் தயாரா? எவரும் எதையும் பேசலாம் ஆனால் செயல் என்பது பேசுவது போன்ற ஒன்றல்ல.
இந்த இடத்தில் பிறிதொரு விடயத்தையும் நோக்கலாம். அதாவது, கூட்டமைப்பு உருவாகிய காலத்தில், பிரபாகரனின் வழிகாட்டலில்தான் கூட்டமைப்பு இயங்கியது. சு.ப.தமிழ் செல்வன்தான் கூட்டமைப்பின் உத்தியோப்பற்றற்ற தலைவராக இருந்தார். ஆனால் அப்போது கூட அகில இலங்கை தமிழ் காங்கிரஸை விடுதலைப்புலிகள் ஒரு தெரிவாக கொள்ளவில்லை. ஆனந்தசங்கரியுடன் சில முரண்பாடுகள் ஏற்பட்ட போதுதான், தமிரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தை எடுப்பது என்னும் முடிவை பிரபாகரன் எடுத்தார். இதனை அப்போது, மூத்த அரசியல் சிந்தனையாளர் திருமாஸ்டர்தான் முன்மொழிந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. அப்போது சைக்கிள் சின்னம் தொடர்பில் ஏன் பிரபாகரன் சிந்தித்திருக்கவில்லை? அது ஒரு கொள்கை வழிச்சின்னமாக இருந்திருந்தால் அதனையல்லவா அவர் தெரிவு செய்திருக்க வேண்டும்.
உண்மையில் தமிழ் மக்களின் கொள்கைவழி அரசியலில் எப்போதுமே ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு கொள்கைவழி தமிழ் தேசியக் கட்சியாக நோக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் அதில் உள்ள ‘அகில இலங்கை’ என்பதும் தமிழ்த் தேசிய கொள்கை வழிக்கு பொருத்தமான ஒன்றல்ல என்றும் விடுதலைப்புலிகள் நோக்கியிருக்க வேண்டும். வீட்டுச் சின்னத்தை முன்மொழிந்த திருமாஸ்டர் ஏன் சைக்கிள் சின்னத்தை முன்மொழியவில்லை. ஏனேனில் செல்வநாயகத்தின் தலைமையில் உருவான தமிழரசு கட்சிக்கு இருந்த தமிழ்த் தேசிய வரலாறுப் பின்னணி, சைக்கிள் சின்னத்தின் கீழிருந்த காங்கிரசுக்கு இருந்திருக்கவிலலை. ஓன்றில் உதயசூரியன், அது இல்லாவிட்டால், வீடு என்னும் நிலையில்தான் அன்று விடுதலைப்புலிகள் சிந்தித்திருந்தனர்.
ஏனெனில் சைக்கிள் சின்னம் எப்போதுமே ஒரு கொள்கை வழிச்சின்னமாக கருதப்படவில்லை. இவ்வாறானதொரு சூழலில், விக்கினேஸ்வரன் சைக்கிள் சின்னத்தில் போட்டிய விருப்பம் தெரிவித்தமை ஒரு மாற்றுக்கான ஆகக் கூடிய விட்டுக்கொடுப்புத்தான். இந்தப் பத்தியாளரைப் பொறுத்தவரையில் விக்கினேஸ்வரன் சைக்கிள் சின்னத்ததை கருத்தில்கொண்டமை தவறாகும். பிரபாகரனால் அங்கிகரிக்கப்படாத ஒரு கட்சியைக் கெண்டே, கஜன் அணியினர் ஒரு கொள்கை வழி மாற்றுத் தலைமையை உருவாக்கப்பபோவதாக குறிப்பிடுவது, அடிப்படையிலேயே தவறான ஒன்றாகும்.
இந்த விடயங்களை தொகுத்து நோக்கினால், விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுத் தலமையை கட்டியெழுப்புவதற்கான சாதகமான சூழல் முற்றிலும் பிரகாசமாகவே இருக்கின்றது ஆனால் கஜேந்திரகுமாரை இணைத்துக் கொண்டு அவ்வாறாதொரு மாற்றை ஒருபோதுமே உருவாக்க முடியாது. ஏனெனில், சைக்கிள் கூடாரத்திற்குள் விக்கி நுழைந்தால் மாற்று உருவாகாது, மாறாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்தான் மீளெழுச்சிகொள்ளும். இதனை சாத்தியப்படுத்துவதற்கு கஜன் அணியினர் கையிலெடுத்திருக்கும் வாதம்தான் கொள்கை வழிக் கூட்டு. முதலில் சைக்கிள் சின்னமே தமிழ்த் தேசிய கொள்கைக்கு மாறான ஒரு சின்னம். அந்த கட்சியின் யாப்பு முற்றிலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒன்று. நிலைமை இவ்வாறிருக்கின்ற போதுஇ சைக்கிள் சின்னத்தின் கீழ் எவ்வாறு ஒரு கொள்கை வழிக் கூட்டை உருவாக்க முடியும்?
கஜனைப் பொறுத்தவரையில் விக்கி தலைமையில் ஒரு வலுவான மாற்று உருவாவதற்கு எப்போதுமே தடையாகவே இருப்பார். ஒரு வேளை கஜனின், நிபந்தனைகளுக்கு அடிபணிந்து விக்கினேஸ்வரன் சைக்கிள் கூடாரத்திற்குள் சரனாகதியடையும்வரையில், கஜன் அணியினரின் குற்றசாட்டுக்களும் ஓயப்போவதில்லை. கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரையில், தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை ஆனால் விக்கினேஸ்வரனுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும். இனி முடிவு விக்கினேஸ்வரனிடம். ஒரு மாற்றுக்கான கூட்டை அறிவிப்பதா அல்லது கஜேந்திரகுமாரை எதர்பார்த்து தனது ஆதரவுத் தளத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துபோவதா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.
-யதீந்திரா-
-யதீந்திரா-
Post a Comment