பிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி
சஹ்ரானை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தால் சஹ்ரானை பிடித்திருக்கலாம் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றிருக்காது என தெரிவுக்குழு முன்னிலையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹபீஸ் நஸாட் நவாவி பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (01) சாட்சியமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டபோதே இந்த வாக்குமூலத்தை வழங்கினார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
ஈ.ஈஆர் பிரிவில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கோப்பு ஒன்று வருமாயின் எனக்கு அந்தக் கோப்பு வழங்கப்படும். பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரின் இறுதி அறிக்கை அடங்கிய கடிதங்கள் சில 2017-06-07 எமக்குக் கிடைத்தன.
2017-06-12ஆம் திகதி எனக்கு அந்த கடிதங்கள் அடங்கிய கோப்பு கிடைத்தது. இதனை அப்போது எனது கண்காணிப்பின் கீழ் இருந்த குழுவில் மலீக் அஸீஸிடம் வழங்கினேன். ஏன் இந்த கோப்பு நவாவியின் ஊடாக அஸீஸக்கு வழங்கப்பட்டது என பிரச்சினை உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சஹரான் என்ற நபர் கூறிய கருத்துக்கள் தமிழ் மொழியில் இருந்தமையால் மலீக் அஸீஸிடம் இந்த கோப்பை பார்க்குமாறு வழங்கியிருந்தேன். அதன் அடிப்படையிலேயே அக்கோப்பை வழங்கினேன்.
1998 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவுடன் இணைந்து பல்வேறு வழக்குகளில் செயற்பட்டுள்ளேன். 2014ஆம் ஆண்டு நெருக்கமாக செயற்பட்டு வருகின்றேன். பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளருடைய இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே அது தொடர்பில் கோப்பொன்றை ஆரம்பித்தோம். அதில் குறிப்பிட்ட நபர் இரண்டு கருத்துக்களைக் கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் பிறந்தநாளை கொண்டாடுவது தவறானது என்று ஒரு பேச்சிலும், தேசிய கொடியை ஏற்றுவது இஸ்லாத்துக்கு எதிரானது என மற்றுமொரு பேச்சிலும் கூறியுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபரை கைதுசெய்து விசாரிக்க முடியுமா என கேட்டிருந்தனர்.
ஏதாவது குற்றம் இழைத்திருப்பதாக ஒருவர் மீது நியாயமான சந்தேகம் இருந்தால் அதன் அடிப்படையில் பொலிஸாருக்கு அந்த நபரைக் கைதுசெய்ய முடியும். ஒருவரை கைதுசெய்ய முடியுமா என சட்டமா அதிபரிடம் கேட்பதாயின், பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒருபடி மேற்சென்றே நடவடிக்கை எடுக்க வேண்டும். வலுவான சாட்சியங்கள் அடங்கிய விசாரணைகள் உள்ளடக்கிய ஒரு பக்கம் கூட இருக்கவில்லை. ஒருவரை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்குவதாயின் அந்த நபர் தொடர்பில் வலுவான சாட்சி அடிப்படையொன்று இருக்க வேண்டும். விசாரணை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே ஆலோசனை வழங்க முடியும்.
கேள்வி : ஏதாவது ஒரு அரசாங்க நிறுவனம் குறைபாடுகளுடன் செயற்பட்டால் அதனை நிவர்த்தி செய்வது மற்றைய திணைக்களத்தின் பொறுப்பு இல்லையா?
பதில் : பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகள் செய்வதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால் விசாரணை செய்வது எப்படி என்று கூறத்தேவையில்லை. பயங்கரவாத் தடுப்பினரால் முதல் தடவையாக வழங்கப்பட்ட கோப்பை கவனத்தில் எடுப்பதற்கு வலுவற்ற கோப்பாகும். அதாவது சட்டமா அதிபர் ஆலோசனை வழங்குவதற்குப் போதிய வலுவான கோப்பு அல்ல. அதன் பின்னர் ஒரு வருடங்களின் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அனுப்பப்பட்ட இரண்டாவது கோப்பில் முன்னரைவிட மேலும் சில உரைகளும், சீடிகளும் இணைக்கப்பட்டிருந்தன.
கேள்வி : பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிய கோப்பு தனிப்பட்ட நோக்கத்தில் அனுப்பப்பட்டது என நினைக்கின்றீர்களா?
பதில் : இல்லை
கேள்வி : பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அனுப்பப்பட்ட கோப்பில் போதிய சாட்சியங்கள் இல்லை. அவர்கள் வழங்கிய வீடியோ இணைப்புக்கள் மற்றும் சீடிகள் போதுமானவை இல்லை எனக் கோரிய கடிதம் இருக்கின்றதா?
பதில் : இல்லை. பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு ஒருவரை கைதுசெய்ய வேண்டுமாயின், அல்லது ஒரு இணையத்தளத்தை தடைசெய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியைக் கோரிக்கொண்டிருக்கத் தேவையில்லை. நாம் வழக்கு கோப்புக்களின் பின்னால் துரத்திக்கொண்டிருப்பதில்லை.
கேள்வி : சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் கடிதம் அல்லது கோப்பை பின்தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதில்லையாயின் பீரிஸ் ஏன் அது தொடர்பில் பல்வேறு கடிதங்களை அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளார்?
பதில் : அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முதலில் முறைப்பாடு செய்த நபரின் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. முறைப்பாட்டாளர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு நேரடியாகச் சென்று முறைப்பாட்டுக் கடிதத்தைக் கையளித்தபோது அவரிடம் தகவல்களைப் பெற்றக்கொண்டிருக்கவில்லை.
கேள்வி : சட்டமா அதிபர் திணைக்களத்தில் எந்தவொரு குறைபாடும் இல்லையென்று கூற முடியுமா?
பதில் : இதற்கு ஆம் இல்லையெனப் பதில் வழங்க முடியாது, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஆலோசனை கோரி கோப்பு ஒன்றை எமக்கு அனுப்பியிருந்தனர். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் எம்மைச் சந்தித்தபோது முழுமையான தகவல்களுடன் வந்திருந்தனர். ஏன் அவர்கள் அதனை முதலில் எமக்கு அனுப்பவில்லை. திணைக்களத்தின் பக்கத்தில் எந்தத் தவறும் இல்லை. சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களம் சஹரானை கைதுசெய்யுமாறு ஆலோசனை வழங்காமையாலேயே குண்டு வெடித்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கின்றோம். 2017 ஜுன் மாதம் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கொழும்பு மஜிஸ்திரேட்டினாலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்னரே சஹரானுக்கு எதிராக இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
கேள்வி :- உங்களின் பக்கம் குறைபாடுகள் இல்லை என்றா நீங்கள் கூறுகின்றீர்கள் ?
பதில் :- நீண்ட நேர மௌனத்தின் பின்னர் திலிப பீரிஸுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடிவிட்டு மீண்டும் பதில் கூறிய அவர் " சட்டமா அதிபர் திணைக்களம் சரியா என கேட்கின்றீர்கள். 22ம் திகதி நான் எழுதிய கடிதத்தில்.
கேள்வி :- உங்களுக்கு அபூபக்கர் பக்தாதி பற்றி தெரியுமா ?
பதில் :- தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை தெரியாது. ஊடகங்களில் அவர் ஒரு பயங்கரவாத அமைப்பாளர் என்று தெரியும்.
கேள்வி :- தனிப்பட்ட முறையில் உங்களுக்கு தெரியுமா என நான் கேட்கவில்லை.
பதில்:- ஆம் ஊடகங்களில் கேள்விப்பட்டுள்ளேன்.
கேள்வி :- சரி சஹரானின் இவளவு மோசமான பிரச்சாரங்களை பார்த்தும் கருத்துக்களை கேட்டும் ஏன் ஐ.சி.சி.பி.ஆர் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? இனியாவது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஆலோசனை வழங்கியிருந்தால் குண்டு வெடிப்பும் நடந்திருக்காது, சஹ்ரானும் சிறையில் இருந்திருப்பார் அப்பாவி மக்களும் கொல்லப்படாது இருந்திருப்பார்கள். நீங்கள் வேண்டுமென்றே பொறுப்புகளை தட்டிக்கழித்துள்ளீர்கள் என்றே நான் நினைக்கின்றேன்?
பதில் :- நீங்கள் கூறியதை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அதுமட்டும் அல்ல சமூகத்தில் இன்று சட்டமா அதிபர் திணைக்களம் சஹரானை கைதுசெய்ய ஆலோசனை வழங்கினால் குண்டு வெடித்திருக்காது என்ற கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. நாம் ஆலோசனை வழங்க முன்னர் இரண்டு திறந்த பிடியாணை இருந்தது. இரண்டு ஆண்டுகாலம் ஒரு நபர் மீது இரண்டு திறந்த பிடியாணை இருந்தும் கைதுசெய்யவில்லை. இரண்டு ஆண்டுகள் பிடியாணை இரண்டு இருந்தும் சட்டம் நீதி அமைச்சு ஒழுங்காக சட்டத்தை கையாளாத நிலையில் சஹரானை கைதுசெய்ய முடியாது போயுள்ளது. தயவுசெய்து சட்டமா அதிபர் திணைக்களம் மீது சுமத்தும் குற்றச்சாட்டு மோசமானது. ஆதாரபூர்வமற்றது.
Post a Comment