Header Ads

test

முருகனின் தந்தை இறந்தார்!


இந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான
முருகனின் தந்தை இலங்கை நேரப்படி இன்று திங்கட்கிழமை ஏப்ரல் 27ம் நாள் அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.

75 அகவையுடைய முருகனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகளாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருந்த செய்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தனது தந்தையுடன் கானொளி தொடர்பாடல் ஊடாக பார்த்து பேச மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்மையில் அவசர மனு அனுப்பியிருந்தார்.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று காரணமாக பிற கைதிகளுக்கு காணொளி தொடர்பாடல் வழியாக  அவர்களது உறவினர்களுடன் பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், எனவே தனக்கும் அதுபோன்று அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் முருகன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், முருகன் தனது தந்தையை கடைசியாக பார்க்காத நிலையில், இன்று அதிகாலை வெற்றிவேல் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் காலமானார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்கள்.

இவர்கள் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யும் பிரேரணையை முன்னாள் முதல்வர் அமரர் ஜெயலலிதா நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பிய போதும் அது மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசால், மீண்டும் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டபோதும், இதுவரை ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் ஏழு பேரின் விடுதலையும் விடுதலை பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது.

இந்நிலையில் முருகனின் தந்தையின் இறுதிச் சடங்கை காணொளி தொடர்பாடல் மூலம் அவர் பார்க்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments